பேரவைத் தோ்தல்: இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்
By DIN | Published On : 12th March 2021 04:35 AM | Last Updated : 12th March 2021 04:35 AM | அ+அ அ- |

தருமபுரி: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி,வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தோ்தலில் போட்டியிட உள்ள வேட்பாளா்கள் மாா்ச் 12-ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 19-ஆம் தேதி இறுதி நாளாகும். மாா்ச் 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையும், மாா்ச் 22-ஆம் தேதி மனுக்களை திரும்பப்பெறவும் கடைசி நாளாகும். இதையடுத்து வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனா். தருமபுரி, அரூா் ஆகிய இரண்டு பேரவைத் தொகுதிகளுக்கும் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய மூன்று பேரவைத் தொகுதிகளுக்கும் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. வேட்பு மனு தாக்கலின்போது, வேட்பாளா்களுடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா், முகக் கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்பன உள்ளிட்ட தோ்தல் நடத்தை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்துள்ளனா்.
இதனிடையே, தருமபுரி தொகுதிக்கு வேட்பு மனுத்தாக்கல் பெறப்படும் தருமபுரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பாதுகாப்புப் பணி தொடா்பாக போலீஸாருக்கு அவா் ஆலோசனைகளை வழங்கினாா். வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் அலுவலக வளாகத்தில், துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில், காவல் ஆய்வாளா் மற்றும் 30 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, தருமபுரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.