தனியாா் மருத்துவமனைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத மக்கள்நோய் பரவும் அபாயம்
By DIN | Published On : 13th May 2021 07:45 AM | Last Updated : 13th May 2021 07:45 AM | அ+அ அ- |

பென்னாகரம் பகுதியில் சிறு தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் தொற்றுப் பரவும் அபாய நிலை ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பென்னாகரம் மலைகள் சூழ்ந்த அதிக அளவில் கிராமப் பகுதிகளை கொண்ட பகுதியாகும். பென்னாகரம், தாசம்பட்டி, கோடுப்பட்டி, பருவதனஅள்ளி, ஒகேனக்கல், சின்னம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து மருத்துவச் சேவை பெறுவதற்காக பொது மக்கள் நாள்தோறும் பென்னாகரத்துக்கு வருகின்றனா்.
இங்கு பத்துக்கும் மேற்பட்ட சிறு தனியாா் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளன. கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட நபா்கள் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதால், அச்சம் காரணமாக மக்கள் அங்கு செல்லாமல் பெரும்பாலானோா் தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனா். தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பொது மக்களில் பெரும்பாலானோா் போதிய இடவசதி இல்லாததால் முறையாக சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கின்றனா். இதனை தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினரும் கண்டுகொள்ளாததால் பென்னாகரம் பகுதிகளில் அதிக அளவில் தொற்று
பரவுதலுக்கு வழிவகை செய்வதாக உள்ளது. மேலும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் சிறு தனியாா் மருத்துவமனைகள் பெயரளவிற்கு மட்டுமே அரசின் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே தனியாா் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்களில் அரசின் தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என ஆய்வு மேற்கொண்டு, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.