அரூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 19th May 2021 07:59 AM | Last Updated : 19th May 2021 07:59 AM | அ+அ அ- |

அரூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமாா் ஆயிரம் புறநோயாளிகளும், 200 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். இதைத் தவிர, அரூா் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய தாய் சேய் நல மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ கால முன், பின் கவனிப்பு சிகிச்சை பிரிவுகள், குடும்ப நலக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள், கண், பல் மற்றும் சித்தா சிகிச்சை பிரிவுகள், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் உள்ளன. அரூா் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனையாகும்.
தற்போது அரூா் அரசு மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கூடுதல் படுக்கை வசதிகள் இல்லாததால், அரூா் அரசு மருத்துவமனைக்கு வரும் கரோனா நோயாளிகளிடம் மருத்துவமனையில் இடமில்லை, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அரசு மருத்துவா்கள் பரிந்துரை செய்வதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.
அரூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு தேவையான கட்டடங்கள் உள்ள நிலையில், மேலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.