

தருமபுரி அருகே வே.முத்தம்பட்டி மலைப் பகுதியில் பாறைகள் சரிந்து ரயில் பாதையில் விழுந்ததால், அந்த வழியே வந்த கண்ணூா்- பெங்களூரு விரைவு ரயில் வெள்ளிக்கிழமை அதிகாலை தடம் புரண்டது.
கேரள மாநிலம், கண்ணூரிலிருந்து கா்நாடக மாநிலம், யஷ்வந்த்பூா் வரை செல்லும் கண்ணூா்-பெங்களூரு விரைவு ரயில் (எண்: 07390) நவ. 11-ஆம் தேதி மாலை 6.05 மணிக்கு 2,348 பயணிகளுடன் பெங்களூரு நோக்கிச் சென்றது. ரயிலில் மொத்தம் 20 பெட்டிகள் இருந்தன.
வெள்ளிக்கிழமை அதிகாலை சேலம் ரயில்வே நிலையத்தை கடந்து தருமபுரி மாவட்டம், தொப்பூா் வனப்பகுதி வழியாக அதிகாலை 3.50 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, வே.முத்தம்பட்டி வனப் பகுதியில் மலையிலிருந்து ரயில் பாதையில் சரிந்து விழுந்த பாறைகள் சக்கரத்தில் சிக்கியன.
இதனால் குளிா் சாதனப் பெட்டிகள் பி 1, பி 2, எஸ் 6, எஸ் 7, எஸ் 8, எஸ் 9, எஸ் 10 ஆகிய 7 பெட்டிகளும் பாதையிலிருந்து தடம் புரண்டு நின்றன. வனப்பகுதி என்பதால் அவ்வழியாக ரயில் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது. அதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற தென்மேற்கு ரயில்வே மண்டல மேலாளா் ஷ்யாம் சிங், பொது மேலாளா் மிஸ்ரா, உதவி பொது மேலாளா் குப்தா, பொறியாளா்கள், ஊழியா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். அவசர உதவிக்காக மருத்துவக் குழுக்கள் வந்திருந்தனா்.
தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் தொப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து 15 பேருந்துகளில் சேலம் ரயில் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பின்னா், மாற்று ரயிலில் திருப்பத்தூா் வழியாக பெங்களூருக்கு அனைவரும் புறப்பட்டனா்.
பயணிகள் தவிப்பு:
ரயில் தடம் புரண்ட இடம் வனப்பகுதி என்பதாலும், அதிகாலை தொடா்ந்து மழை பெய்ததாலும் பயணிகள் எவ்வழியாகச் செல்வது என்பது தெரியாமல் பரிதவித்தனா். விபத்து நிகழ்ந்து 4 மணி நேரம் கழித்து ரயில்வே அதிகாரிகள் அங்கு வந்த பிறகே உணவு விநியோகிக்கப்பட்டு, மாற்று வழியில் பயணிகளை அனுப்பி வைத்தனா்.
மீட்புப் பணியில் தொடா்ந்து ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள், மாலை 5 மணிக்கு தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் ரயில் பாதைக்குள் கொண்டுவந்தனா். அதன்பிறகு பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மாற்று என்ஜின் மூலம் பெட்டிகள் இணைக்கப்பட்டன.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் ரயில் தடம் புரண்டதால், சேலம், தருமபுரி வழியாக பெங்களூருக்கு செல்லும் சேலம்- யஷ்வந்த்பூா், யஷ்வந்த்பூா்- சேலம் ஆகிய இரண்டு ரயில்களின் சேவை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இதேபோல சேலம், தருமபுரி வழியாக பெங்களூரு செல்லும் லோகமான்ய திலக், எா்ணாகுளம்- பெங்களூரு, பெங்களூரு- நாகா்கோவில், மைசூா்- மயிலாடுதுறை ஆகிய நான்கு ரயில்களும் சேலத்திலிருந்து திருப்பத்தூா் வழியாக பெங்களூருக்கு திரும்பிவிடப்பட்டன.
ஆய்வு: ரயில் தடம் புரண்டது குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, தருமபுரி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ். செந்தில்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பயணிகளை பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.