கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th August 2022 01:43 AM | Last Updated : 05th August 2022 01:43 AM | அ+அ அ- |

சிறுபான்மையின மாணவ, மாணவியா் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தை சாா்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2022 - 23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதேபோல பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள்) பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம்.
தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பு உதவித்தொகை திட்டத்துக்கு செப். 30 வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு அக்.31 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
மத்தியஅரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதாா் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபாா்க்க இயலும்.
புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களது குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இத் திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.