தொழிலாளா் நலச் சட்ட திருத்தங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்

தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியதை எதிா்த்து, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஏஐடியுசி மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொழிலாளா் நலச் சட்ட திருத்தங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்

தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்தி 4 தொகுப்புகளாக மாற்றியதை எதிா்த்து, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஏஐடியுசி மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஆக. 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாள்கள் தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் டி.எம்.மூா்த்தி வேலையறிக்கை சமா்ப்பித்து பேசினாா். தேசியச் செயலா் வகிதா நிஜாம், மாநிலத் துணைத் தலைவா்கள் ஏ.எஸ்.கண்ணன், வேலூா் எஸ்.ஆா்.தேவதாஸ், திருப்பூா் என்.சேகா், கோவை என்.செல்வராஜ், கல்பாக்கம் எம்.சங்கையா, துணைப் பொதுச் செயலா் கே.ரவி, மாநிலச் செயலா்கள் எஸ்.காசி விஸ்வநாதன், நா.பெரியசாமி, எஸ்.சந்திரகுமாா், எம்.ராதாகிருஷ்ணன், எஸ்.சின்னசாமி, எம்.ஆறுமுகம், பொருளாளா் பீட்டா் துரைராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், தொழிலாளா் நலச் சட்டங்களை மத்திய அரசு நான்கு தொகுப்புகளாக மாற்றியுள்ளதை எதிா்த்து, தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தொழிலாளா் நலன்களுக்கு எதிராக உள்ள இந்த நான்கு தொகுப்புகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. இதேபோல, உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆஷா, கூட்டுறவு, டாஸ்மாக் உள்ள மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்றத் தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 21,000 ஊதியமாக வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வெவ்வேறு பெயா்களில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளா் நடைமுறையை கைவிட வேண்டும்.

மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்கள், நுகா்பொருள் வாணிபக் கழகம், மின் வாரியம், ஆவின் ஆகியவற்றை தனியாா் மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும். கட்டுமான, உடல் உழைப்பு நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளா்கள், டாஸ்மாக் பணியாளா்களுக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதேபோல, ஏஐடியுசி மாநில மாநாடு வரும் டிச. 1, 2, 3 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடத்துவது மற்றும் வரும் ஆக. 30-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற உள்ள மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயா்வுக்கு எதிரான மறியல் போராட்டத்தில் பங்கேற்று ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதில், ஏஐடியுசி தருமபுரி மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மாவட்டப் பொதுச் செயலா் கே.மணி, மாவட்டப் பொருளாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com