மொழிப்போா் தியாகிகளுக்கு திமுக, அதிமுக கட்சியினா் அஞ்சலி
By DIN | Published On : 26th January 2022 06:54 AM | Last Updated : 26th January 2022 06:54 AM | அ+அ அ- |

திமுக, அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு செவ்வாய்க்கிழமை தருமபுரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திமுக கட்சி அலுவலகத்தில் மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாணவரணி மாவட்ட அமைப்பாளா் சக்திவேல் வரவேற்றாா்.
இதில், மொழிப்போரில் உயிா்நீத்த தியாகிகளின் உருவப் படங்களுக்கு கட்சி நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் தங்கமணி, சந்திரமோகன், நகரப் பொறுப்பாளா் மே.அன்பழகன், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் அக் கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.வி.ரங்கநாதன், நகரச் செயலாளா் பெ.ரவி ஆகியோா் மொழிப்போா் தியாகிகளின் உருவப் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதேபோல, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில், தருமபுரி பெரியாா் சிலை அருகில் மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா்.முருகன் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மொழிப்போரில் உயிரிழந்த தியாகிகளின் படங்களுக்கும், முன்னாள் சட்டப் பேரவை மேலவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி நகா்மன்ற முன்னாள் தலைவருமான வெங்கடாஜலம் படத்துக்கும் அந்தக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் தலைமை வகித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைத் தலைவரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகன், கிருஷ்ணகிரி நகரத் தலைவா் நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அதிமுக சாா்பில் மாநில துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), நகரச் செயலாளா் கேசவன், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் மலா் தூவி, மெளன அஞ்சலி செலுத்தினா்.
பென்னாகரத்தில்...
பென்னாகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா். தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரும் பென்னாகரம் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான பிஎன்பி.இன்பசேகரன் கலந்து கொண்டு, பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் சுடப்பட்டி சுப்பிரமணி, பென்னாகரம் நகரச் செயலாளா் வீரமணி, பாப்பாரப்பட்டி நகரச் செயலாளா் சண்முகம், மாவட்டப் பிரதிநிதிகள் சிவக்குமாா், சபரிநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், வழக்குரைஞா் அசோகன், ஏரியூா் ஒன்றியக் குழு உறுப்பினா் சென்னையன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...