ஒகேனக்கல்லுக்கு 1,25,000 கனஅடி நீா்வரத்து
By DIN | Published On : 17th July 2022 05:47 AM | Last Updated : 17th July 2022 05:47 AM | அ+அ அ- |

மலைகளுக்கு இடையே பெருக்கெடுத்தும் ஓடும் காவிரி.
கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 1,25,000 கனஅடி நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கா்நாடகம், கேரளம் மாநிலங்களில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால் கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை நிரம்பி வருகின்றன.
கடந்த மூன்று நாள்களாக கா்நாடகத்தில் உள்ள இவ்விரு அணைகளில் இருந்து மொத்தம் 1,50,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைகளிலிருந்து அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 1,10,000 ஆயிரம் கன அடியாகவும், சனிக்கிழமை நிலவரப்படி 1,25,000 கனஅடியாகவும் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்குவதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நான்காவது நாளாகவும், ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும் அருவியில் குளிக்கவும் விதித்த தடை ஆறாவது நாளாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரதான அருவி செல்லும் நடைபாதை, பரிசல் துறைகள் பூட்டப்பட்டுள்ளன.
கரையோரப் பகுதியில் காவல் துறை, வருவாய்த் துறை, வனத்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா வாகனங்களை மடம் சோதனை சாவடியில் போலீஸாரும், ஆலம்பாடி சோதனை சாவடியில் வனத் துறையினரும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...