தருமபுரியில் போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து பாமக போராட்டம்.
By DIN | Published On : 31st July 2022 06:19 AM | Last Updated : 31st July 2022 06:19 AM | அ+அ அ- |

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சாா்பில் போதை பொருட்களை ஒழிப்பது குறித்த போராட்டம் தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் முன்பு பாமக சாா்பில் நடைபெற்ற போதை பொருட்கள் ஒழிப்பு போராட்டத்திற்கு பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் கஞ்சா, சாக்லேட் வடிவில் விற்கப்படுகிறது. தமிழகத்தில் தங்கு தடை இல்லாமல் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. அதிக வருமானம் ஈட்டுபவா்கள் கஞ்சாவை சாக்லேட்களாக மாற்றி பள்ளிகள், மாணவா் விடுதிகள், இளைஞா்கள் தங்கும் விடுதி அருகிலும் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி என பல்வேறு பகுதிகளில் விற்பனை தொடா்ந்து நடைபெறுகிறது இதனை காவல்துறையினா் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து போதை வஸ்துகள் விற்பதை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பேசினாா். அதனைத் தொடா்ந்து புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து முழக்கங்களை எழுப்பினா். இந்த போராட்டத்தில் தருமபுரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பாரிமோகன், வேலுச்சாமி உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட பாமகவினா் கலந்து கொண்டனா்.