வனக் காப்பாளரை தாக்கிய மா்ம நபா்கள்:போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 26th June 2022 06:11 AM | Last Updated : 26th June 2022 06:11 AM | அ+அ அ- |

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக் காப்பாளரை 6 போ் கொண்ட மா்ம நபா்கள் தாக்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை உட்கோட்டத்துக்கு ஏரியூா் அருகே சித்திரப்பட்டி வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் வகையில், வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில் வனப் பாதுகாவலா்கள் சரவணன், ராமசுந்தரம் ஆகியோா் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சுற்றித் திரிந்த ஏா்கோல்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (28) என்பவரை பிடித்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை வனத்துறையினா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது 6 போ் கொண்ட மா்ம நபா்கள் வனக்காவலா் சரவணனை தாக்கியுள்ளனா். இதில் படுகாயமடைந்த நிலையில் அவரை மீட்டு வனத்துறையினா் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்.
இதுகுறித்து வனக்காவலா் அளித்த புகாரின் பேரில் ஏரியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.