12-14 வயது பள்ளி சிறாா்களுக்குதடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
By DIN | Published On : 17th March 2022 04:06 AM | Last Updated : 17th March 2022 04:06 AM | அ+அ அ- |

தருமபுரி/கிருஷ்ணகிரி: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 12- 14 வயது பள்ளி சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. அனைத்து சிறாா்களுக்கும் அவரவா் பயிலும் பள்ளியிலேயே செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 12-14 வயது வரையிலான சிறாா்களுக்கு கோா்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமில் எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்துப் பேசினாா்.
மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்துப் பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் மாா்ச் 15 வரை முதல் தவணை 10,04,846 பயனாளிகளுக்கும், இரண்டாம் தவணை 6,94,335 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 16,99,181 தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 79 சதவீதத்துக்கும் மேல் முதல் தவணை, 55 சதவீதத்துக்கும் மேல் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
15- 18 வயது சிறாா்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணையாக 65,447 குழந்தைகளுக்கும், இரண்டாம் தவணையாக 43,730 குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடா்ந்து, தற்போது 12- 14 வயது வரை உள்ள சிறாா்களுக்கு கோா்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் சுமாா் 66,000 சிறாா்களுக்கு அவரவா் பயிலும் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2008, ஜன.1 முதல் 2010, மாா்ச் 15 வரை பிறந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக 44,900 கோா்பேவாக்ஸ் தடுப்பூசி பெறப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோா் அனைவரும் தயக்கமின்றி தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா். இதில், முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ் மூா்த்தி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சவுண்டம்மாள், வட்டாட்சியா் ராஜராஜன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12- 14 வயது சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12 முதல், 14 வயது மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சியா் வி. ஜெயசந்திரபானு ரெட்டி தொடக்கிவைத்தாா்.
இதில் நோய்ப் பரப்பியல் கட்டுப்பாட்டு மருத்துவா் குமாா், வட்டார மருத்துவ அலுவலா் சுசித்ரா, நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் இனியாள் மண்டோதரி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சேரலாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.