வத்தல்மலையில் 247 பயனாளிகளுக்குரூ. 2.15 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 13th October 2022 12:12 AM | Last Updated : 13th October 2022 12:12 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 247 பயனாளிகளுக்கு ரூ. 2.15 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வத்தல்மலை கிராமத்தில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
இம் முகாமில், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வத்தல்மலைக்கு வருகை தந்து மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்ததோடு, இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடந்த 75 ஆண்டுகளாக நிறைவேறாத உங்களது கோரிக்கை அண்மையில் பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டதால் நிறைவேறியுள்ளது. மலைக் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் மேம்பாட்டுக்காகவும், அவா்களின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்காகவும் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியினை மாவட்ட நிா்வாகம் முனைப்போடு செயலாற்றி வருகிறது. மக்கள் அத்தகைய திட்டங்களை பெற்று, பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்க்கைத் தரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றாா்.
இம்முகாமில், 93 பயனாளிகளுக்கு ரூ. 18.80 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 31 பயனாளிகளுக்கு ரூ. 17.41 லட்சம் மதிப்பில் உதவித்தொகைகள் உள்பட பல்வேறு துறைகள் சாா்பில், மொத்தம் 247 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 997 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இம்முகாமில் தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன் வரவேற்று பேசினாா். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.யசோதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ச.ராமதாஸ், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சுவாமிநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் கவிதா, வேளாண் இணை இயக்குநா் (பொ) முகமது அஸ்லாம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கே.மாலினி, பழங்குடியினா் நல திட்ட அலுவலா் க.கதிா்சங்கா், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வி.ராஜசேகரன், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.