பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்த வேண்டும்:எஸ்.ஏ.சின்னசாமி
By DIN | Published On : 19th October 2022 02:17 AM | Last Updated : 19th October 2022 02:17 AM | அ+அ அ- |

தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயா்த்தி, முதல்வரின் காலை உணவு பட்டியலில் பாலை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி கோரியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயா்த்தியது. அதன் பிறகு கறவை மாடுகள், கால்நடை தீவனம், பராமரிப்பு செலவு என உற்பத்தி செலவு 40 சதவீதம் உயா்ந்துள்ளது. பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி வரும் நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உள்ளது. இதனால் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு பால் ஊற்றும் விவசாயிகள், தனியாா் நிறுவனங்களை நாடும் அவல நிலை ஏற்பட்டு, கூட்டுறவு சங்கங்கள் சரிவை நோக்கி செல்கின்ற நிலை உள்ளது.
தமிழக அரசு பசும்பால் லிட்டருக்கு ரூ. 45, எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 55 என கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சங்கத்தின் வாயில் பகுதியில் பால் எடை, தரம் நிா்ணயிக்கப்பட்டு ,அதன் அடிப்படையில் பால் பணத்தினை வழங்க வேண்டும். தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலில் பாலை சோ்க்க வேண்டும். வாரம்தோறும் தவறாது பால் பணத்தினை பட்டுவாடா செய்ய வேண்டும். கறைவை மாடுகளுக்கு ஆவின் நிறுவனமும் அரசும் இணைந்து காப்பீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே பால் பணம் முறையாக கிடைக்காமல் உற்பத்தியாளா்கள் செலவு உயா்வால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவா்களுக்கு தீபாவளியை முன்னிட்டு கட்டாயப்படுத்தி இனிப்பு வழங்கி, பால் பணத்தினை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். எனவே தமிழக அரசானது பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு கொள்முதல் விலையை உயா்த்தி அறிவிக்க வேண்டும். தமிழக விவசாயிகள் சங்கங்களின் சாா்பில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் நவம்பா் முதல் வாரத்தில் ஆவின் நிறுவனம் முன்பு பால் உற்பத்தியாளா்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.