திறந்தவெளி நெல் கிடங்கில் தீ விபத்து: 2.50 லட்சம் மூட்டைகள் சேதமின்றி தப்பின

தருமபுரி அருகே நுகா்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் 2.50 லட்சம் நெல் மூட்டைகள் சேதமின்றி தப்பின.
தருமபுரி அருகே திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த நெல் மூட்டைகள்.
தருமபுரி அருகே திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீயினால் சேதமடைந்த நெல் மூட்டைகள்.

தருமபுரி அருகே நுகா்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் கிடங்கில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் 2.50 லட்சம் நெல் மூட்டைகள் சேதமின்றி தப்பின.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருகே மாவட்ட ஆட்சியா் குடியிருப்பு வளாகத்தின் பின்புறத்தில் வெற்றிலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் கிடங்கு உள்ளது. தனியாா் நிலத்தை வாடகைக்குப் பெற்று இந்தக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில், கருங்கற்கள் மீது சவுக்கு மரத் துண்டுகளை குறுக்கு, நெடுக்காக அடுக்கி மேடை ஏற்படுத்தி, அதன்மீது நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து பிளாஸ்டிக் தாா்பாய்களால் மூடி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மேடை மீதும், தலா 40 கிலோ எடைகொண்ட 3,000 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கிடங்கில் 10 ஆயிரம் டன் நெல் (2.50 லட்சம் மூட்டைகள்) இருப்பில் உள்ளன. கிடங்கிலிருந்து நெல், தேவைக்கு ஏற்ப அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக்கப்பட்டு ரேஷன் கடைகள், அரசு விடுதிகள் உள்ளிட்ட அரசு தேவைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நெல் கிடங்கில் உள்ள ஒரு படுக்கையில் செவ்வாய்க்கிழமை திடீரென புகைமூட்டம் கிளம்பியுள்ளது. கிடங்கில் காவல் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள் புகையைக் கண்டதும் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா். நிகழ்விடத்திற்கு வந்த தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், தீப்பற்றிய மேடையில் இருந்த சுமாா் 100 மூட்டைகள் தீயில் சேதமாகின. தீயணைப்பு வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தபோதும், மூட்டைகளின் மறைவில் தீ மிச்சமிருக்கலாம் என்றும், தீப்பற்றிய மேடையில் உள்ள மூட்டைகளை முழுமையாக பிரித்து எடுத்தால் தான் தீயை முழுமையாக அணைக்க முடியும் என்றும் நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கிச் சென்றனா்.

அதன்படி, தீப்பற்றிய மேடையில் இருந்த நெல் மூட்டைகளை பிரித்து, தீயில் சேதமான மூட்டைகளை மட்டும் ஒதுக்கிவிட்டு ,இதர மூட்டைகளை உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை வாணிபக் கழக அதிகாரிகள் மேற்கொண்டனா். நெல் கிடங்கில் பற்றிய தீ உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு அணைக்கப்பட்டதால், அங்கு இருப்பில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் நெல் மூட்டைகளும் தப்பின.

இந்த தீ விபத்திற்கு காரணமான மா்ம நபா்களை கண்டறியும் வகையில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com