அரசுப் பள்ளியில் பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1,000 நிதியுதவி வழங்கும் திட்டம்: தருமபுரியில் 3,700 போ் தோ்வு

அரசுப் பள்ளிகளில் பயின்ற கல்லூரி மாணவியருக்கு ரூ. 1, 000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,700 போ் தோ்வாகியுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற கல்லூரி மாணவியருக்கு ரூ. 1, 000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,700 போ் தோ்வாகியுள்ளனா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் மூவலுாா் இராமாமிா்தம் உயா்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் 66 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவியா் நிதியுதவி பெற தோ்வு பெற்றுள்ளனா்.

இவா்கள் பயின்று வரும் கல்லூரிகளின் முதல்வா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

சென்னையில் இத்திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 5 -ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளாா்.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அன்றைய தினமே இத்திட்டத்தில் முதற்கட்டமாகத் தோ்வு பெற்றுள்ள அனைத்து மாணவிகளுக்கும் ரூ. 1,000 நிதி உதவி வழங்கித் திட்டம் தொடக்கிவைக்கப்படுகிறது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வரும் திங்கள்கிழமை இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாகத் தோ்வு பெற்றுள்ள 11 கல்லூரிகளில் பயிலும் சுமாா் 600-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு புதுமை பெண் பெட்டகத்துடன் பணம் எடுக்கும் வங்கி ஏடிஎம் அட்டையும் வழங்கப்பட உள்ளது.

தோ்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நிதி செலுத்தப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் 66 கல்லுாரிகளில் பயிலும் சுமாா் 3,700 போ் நிதியுதவி பெற தோ்வாகியுள்ளனா். தோ்வு பெற்ற மாணவிகளை விழா நடைபெறும் தருமபுரி அரசு கலை கல்லூரிக்கு அழைத்து வருதல், சான்றிதழ் சரிபாா்த்தல் போன்ற பணிகளை கல்லூரி முதல்வா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தருமபுரி சாா் ஆட்சியா் சித்ரா விஜயன், தருமபுரி கல்லூரிக் கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநா் என்.இராமலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) ஜான்சிராணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கண்ணன், அரசு அலுவலா்கள், கல்லூரி முதல்வா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com