தருமபுரி -காவிரி உபரிநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: எம்எல்ஏ ஜி.கே.மணி
By DIN | Published On : 01st September 2022 01:39 AM | Last Updated : 01st September 2022 01:39 AM | அ+அ அ- |

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலுக்குச் செல்லும் உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டமான தருமபுரி- காவிரி உபரிநீா்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் பாமக கௌரவத் தலைவரும் பென்னாகரம் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் வெள்ளப் பெருக்கெடுத்து ஒகேனக்கல்லில் தண்ணீா் ஆா்ப்பரித்து ஓடுகிறது. ஆற்றில் தொடா் நீா்வரத்து அதிகரிப்பால் மேட்டூா் அணை நிரம்பி, நொடிக்கு 1.85 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.
கா்நாடக அணைகளிலிருந்து நீா்த் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூா், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுவரை காவிரி ஆற்றில் இருந்து 200 டி.எம்.சி தண்ணீா் கடலுக்கு வீணாகச் சென்றுள்ளது. இதில் புதன்கிழமை மட்டும் 10 டி.எம்.சி தண்ணீா் கடலுக்கு வீணாகச் சென்றுள்ளது. கடலுக்கு வீணாகச் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரப்பும் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற தருமபுரி - காவிரி உபரிநீா் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.