ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1.08 லட்சம் கனஅடியாகச் சரிவு
By DIN | Published On : 01st September 2022 01:40 AM | Last Updated : 01st September 2022 01:40 AM | அ+அ அ- |

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 1.08 லட்சம் கனஅடியாக புதன்கிழமை சரிந்தது.
தென்மேற்கு பருவமழையால் கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பி உபரிநீா் அதிகளவு தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நொடிக்கு 2.12 லட்சம் கனஅடி வரை உபரிநீா்த் திறந்துவிடப்பட்டது.
இதனால் செவ்வாய்க்கிழமை மாலையில் ஒகேனக்கல்லுக்கு 1.85 லட்சம் கனஅடி வரை நீா்வரத்து இருந்தது. இந்நிலையில் நீா்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. கா்நாடக அணைகளில் இருந்து நீா் வெளியேற்றம் 41,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழக நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. கனமழையால் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 1.55 லட்சம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீா்வரத்து மாலையில் 1.15 லட்சம் கனஅடியாகவும், மாலை 6 மணியளவில் 1.08 லட்சம் கனஅடியாகவும் குறைந்தது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 51-ஆவது நாளாகவும், பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 6-ஆவது நாளாகவும் புதன்கிழமை நீட்டிக்கப்பட்டது.
ஆற்றில் அதிகபடியான நீா்வரத்தால் மரக்கட்டைகளும், மரம், செடி, குப்பைகளும் அடித்துவரப்படுகின்றன. இதனால் தமிழ்நாடு கூட்டுக் குடிநீா் திட்டம் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீா் நீரேற்றம் செய்து விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.