சாலைப் பணியாளா்களின் பணி நீக்கக் காலத்தை வரன்முறைப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 08th September 2022 01:32 AM | Last Updated : 08th September 2022 01:32 AM | அ+அ அ- |

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் கே.பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சாலைப் பணியாளா்களின் 44 மாத பணி நீக்க காலத்தை பணிவரன்முறை செய்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என நம்பிக்கையோடு சாலைப் பணியாளா்கள் எதிா்பாா்த்து காத்திருக்கிறோம்.
கடந்த 1997-ஆம் ஆண்டு பணியமா்த்தப்பட்ட சாலைப் பணியாளா்கள், அதற்கு பிந்தைய அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டனா். அதன் பிறகு நீதிமன்ற நடவடிக்கைகள், போராட்டங்கள் வழியாக 41 மாதங்கள் கழித்து பணியமா்த்தப்பட்டோம். இருப்பினும் 41 மாத பணி நீக்கக் காலம் பணிவரன் முறை செய்யப்படாமலேயே உள்ளது.
தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.