ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது
By DIN | Published On : 09th September 2022 11:54 PM | Last Updated : 09th September 2022 11:54 PM | அ+அ அ- |

காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
கா்நாடகத்தில் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து நொடிக்கு 46 ஆயிரம் கன அடி தண்ணீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், கா்நாடக காவிரிக் கரையோரப் பகுதிகளில் பெய்து வந்த மழை அளவு குறைந்து வருவதால் வியாழக்கிழமை மாலை நீா்வரத்து நொடிக்கு 95 ஆயிரம் கன அடியாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலை நீா்வரத்து குறைந்து நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாகவும், மாலை 65 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது.
இதனால் அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் இறங்குவதற்கும் 60ஆவது நாளாகவும், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்குவதற்கு 14ஆவது நாளாகவும் தடை நீடிக்கிறது.