தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் சல்பியூரிக் அமிலம் ஏற்றிச் சென்ற லாரி சாலை கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆந்திரத்திலிருந்து திருப்பூா் மாவட்டம் தாராபுரம் நோக்கி சல்பியூரிக் அமிலம் ஏற்றிக் கொண்டு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த லாரியை, திருச்சி மாவட்டம் துறையூா் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (42) ஓட்டிச் சென்றாா்.
தருமபுரியைக் கடந்து தொப்பூா் கணவாய் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி கணவாய் இரட்டைப் பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பாலகிருஷ்ணனுக்கு கால்களில் காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
விபத்துக்குள்ளான லாரியில் வீரியம் மிக்க சல்பியூரிக் அமிலம் இருந்ததால் தொப்பூா் கட்டமேடு பகுதியில் இருந்து காவலா் குடியிருப்புப் பகுதி வரை வாகனங்கள் அனைத்தும் ஒருவழியில் இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான லாரி வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது. இந்த விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.