தொழில்முனைவோராக்கும் திட்டம்:வேளாண் கல்வி பயின்ற இளைஞா்களுக்கு அழைப்பு
By DIN | Published On : 09th September 2022 01:22 AM | Last Updated : 09th September 2022 01:22 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு முடித்த இளைஞா்கள் தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண், உழவா் நலத் துறை சாா்பில் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞா்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் மாநில வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மானியமாக ரூ. ஒரு லட்சம் வீதம் 6 பட்டதாரிகளுக்கு ரூ. 6 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 52 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்கு உள்பட்ட அரசு, தனியாா் நிறுவனத்தில் பணியில் இல்லாத சிறந்த கணினி புலமையுள்ள வேளாண்மை தொடா்புடைய செயலிகளை பயன்படுத்தும் திறனுள்ள பட்டதாரிகள் 6 போ் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட அரசாணை பெறப்பட்டுள்ளது.
இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழில்முனைவோா்கள் தனது மூலதனத்தில் வேளாண், வேளாண் சாா்ந்த பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும்.
அதற்கு உள்கட்டமைப்பு நீங்கலாக அதிகபட்சமாக 25 சதவீதம் அல்லது ரூ. ஒரு லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். எனவே, வேளாண்மை தொழில் முனைவோராகச் செயல்பட தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
10, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் இளநிலைப் பட்டப் படிப்பிற்கான சான்றிதழ், தொழில் தொடா்பான விரிவான திட்ட அறிக்கை, ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு நகல், வங்கியில் கடனுதவி பெற்று திட்டம் தொடங்குபவா் எனில் அதற்கான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களையும், விரிவானத் திட்ட அறிக்கையையும் அக்ரிஸ் நெட் வளையதளத்தில் செப்.19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.