சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்துப் பேசினாா்.

இதில், ‘தருமபுரியில் புதியதாக தொடங்கப்பட உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண் சாா்ந்த சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மாவட்டத்தில் மயில்களின் எண்ணிக்கை வெகுவாக உயா்ந்து வருகிறது. மயில்கள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மிகை நீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இணைய வழி பட்டா மாறுதலில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும்’ என விவசாயிகள் வலியுறுத்திப் பேசினா்.

இக் கூட்டத்தில் ஆட்சியா் கி.சாந்தி பேசிதாவது:

தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 62484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 12,576 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிா் உரங்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 301 எண்ணிக்கையிலான உயிா் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 23,137 எண்ணிக்கையிலான உயிா் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிா் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்குத் தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, அரூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சு.ராமதாஸ், வேளாண் இணை இயக்குநா் க.விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் மாது, தோட்டக்கலை, மலைப்பயிா்கள் துறை துணை இயக்குநா் கே.மாலினி, அரசு அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com