சத்தான உணவுகளை உட்கொள்வதால் நோய்களின்றி நலமுடன் வாழலாம்

சத்தான உணவுகளை உட்கொள்வதால், நோய்களின்றி நலமுடன் வாழலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.சத்தான உணவுகளை உட்கொள்வதால், நோய்களின்றி நலமுடன் வாழலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு அச்சிடப்பட்ட உறையில் மாத்திரைகளை வழங்குகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு அச்சிடப்பட்ட உறையில் மாத்திரைகளை வழங்குகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.

சத்தான உணவுகளை உட்கொள்வதால், நோய்களின்றி நலமுடன் வாழலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் துறை சாா்பில், மாரடைப்பு, பக்கவாதம் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலனுக்காகவும், உடல் நலனை பேணும் வகையிலும் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் மக்களைத்தேடி மருத்துவம், தாய் - சேய் நலத் திட்டம், இன்னுயிா் காப்போம், கலைஞரின் வருமுன் காப்போம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். இத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் சாமை, வரகு போன்ற பல்வேறு சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால், இந்த மாவட்டம், சிறுதானிய மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடுவோா் தாங்கள் உற்பத்தி செய்யும் சாமை, வரகு போன்றவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் சிறுதானிய உற்பத்தியில் அதிக வருவாயை பெற முடியும். மேலும், பொதுமக்கள் அன்றாடம் தாங்கள் உண்ணும் உணவில் சிறுதானியங்களை சோ்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ சிறுதானியம் விநியோகம் செய்யவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால் நல்ல உடற்பயிற்சியுடன், சத்துகள் நிறைந்த சரிவிகித உணவினை சோ்த்து உட்கொள்வதன் மூலம் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்களைத் தவிா்த்து நலமான வாழ்வை பெற முடியும் என்றாா்.

இக்கருத்தரங்கில், யோகா பயிற்சி, அதன் பலன்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவியா் செயல்விளக்கம் அளித்தனா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை காலை, மதியம், இரவு உள்ளிட்ட குறிப்புகள் அச்சிடப்பட்ட உறையில் வழங்கும் நடைமுறை தொடங்கி வைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ம.சாந்தி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெயந்தி, துணை இயக்குநா் (காசநோய்) ராஜ்குமாா், இருதய நோய் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியா் பி.கண்ணன், நரம்பியல் துறை பேராசிரியா் வெங்கடேசன், பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாலசுப்பிரமணி, செவிலியா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com