

தருமபுரி-மொரப்பூா் ரயில் பாதைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் மதிப்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாணவியா் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட புதிய கழிவறை திறப்பு விழா, தருமபுரி அரசு மருத்துவமனை அருகே ரூ. 19.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், பங்கேற்று கழிவறைக் கட்டடம், புதிய பேருந்து நிழற்கூடம் ஆகியவற்றை மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். அப்போது அவா் பேசிதாவது:
மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவியரின் பயன்பாட்டுக்கு கழிவறைகள் கட்டுதல், புதிய நிழற்கூடங்கள், உயா் மின்கோபுரங்கள் அமைத்தல், சாலை, குடிநீா், சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை மக்களவைத் தொகுதியில் 8 பள்ளிகளில் நவீன கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நவீன கழிவறை கட்டப்பட்டுள்ளது. ரூ. 15 லட்சம் மதிப்பில் ஊரகப் பகுதிகளில் 9 நிழற்கூடங்களும், நகரப் பகுதியில் 2 பேருந்து நிழற்கூடங்களும் கட்டப்பட்டுள்ளன.
தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு 3-ஆவது கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இப் பணிகள் நிறைவடைந்ததும் பாதை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒகேனக்கல் குடிநீா் இரண்டாவது திட்டத்தை ரூ. 7,386 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதில், ரூ. 4,000 கோடி நிதி மத்திய அரசு ஜல்ஜீவன் திட்டத்தில் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள நிதி ஜப்பான் வங்கியிலிருந்து பெறப்படவுள்ளது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த 2054-ஆம் ஆண்டு வரை தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீா்த் தட்டுபாடின்றி வழங்க முடியும்.
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிா்க்க வளைவுகள் அற்ற சாலை ரூ. 364 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இந்தச் சாலையில் 5.8 கி.மீ.தொலைவுக்கு தருமபுரியிலிருந்து வாகனங்கள் சேலம் நோக்கிச் செல்லும் சாலையாக அமையும். அதுபோல தற்போதுள்ள சாலை சேலத்திலிருந்து தருமபுரி நோக்கி வாகனங்கள் வருவதற்கு பயன்படுத்தப்படும் சாலையாக அமையும். தருமபுரி மாவட்டத்தில் கலசப்பாடி, கோட்டூா்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்க மத்திய அரசு, பிரதமரின் சாலை அமைக்கும் திட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், வனத்துறையிடமிருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு ரூ. 2 கோடி வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் உள்ளதால் இச்சாலைகள் அமைக்க தாமதமாகி வருகிறது. இதுகுறித்து துறை உயா் அலுவலா்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில், அரசு கலைக்கல்லூரி முதல்வா் கண்ணன், அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியா் கு.சிவப்பிரகாசம், உடல்கல்வி இயக்குநா் பாலமுருகன், நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.