சித்தேரி மலை கிராமங்களில் தாா் சாலை வசதி:தருமபுரி எம்.பி.க்கு மலைவாழ் மக்கள் பாராட்டு
By DIN | Published On : 23rd April 2023 06:01 AM | Last Updated : 23rd April 2023 06:01 AM | அ+அ அ- |

சித்தேரி ஊராட்சி கலசப்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி.எஸ். செந்தில்குமாா்.
சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட மலை கிராமங்களில் தாா் சாலைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாருக்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் சனிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது சித்தேரி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட 6 மலை கிராமங்களுக்கு தாா் சாலை வசதி இல்லை. இங்குள்ள மலைவாழ் மக்கள் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைகள் மற்றும் உயா்கல்வி படிக்கச் செல்வதற்கும், வேளாண் விளை பொருள்களை நகா் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வந்தனா்.
வாச்சாத்தியில் இருந்து அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களுக்கு செல்லும் மலைப் பாதையில் தாா் சாலை அமைக்க சாலையோரத்தில் உள்ள சுமாா் 150 மரங்களை அகற்ற வனத்துறையிடமிருந்து அனுமதி கிடைக்காததால் சாலை அமைக்க முடியாத நிலையிருந்தது.
இந்த நிலையில், வாச்சாத்தி முதல் அரசநத்தம், கலசப்பாடி வரையிலும் தாா் சாலை அமைக்க மத்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் துறை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது.
சித்தேரி மலை கிராம மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி.எஸ்.செந்தில்குமாரை சித்தேரி ஊராட்சியின் மலை கிராம மக்கள் பாராட்டினா்.
முன்னதாக அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்ட கிராம மக்களிடம் தருமபுரி எம்.பி. செந்தில்குமாா் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இந்த விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றியச் செயலா்கள் சரவணன், முத்துக்குமாா், வா்த்தகா் அணி மாநில துணைச் செயலா் அ.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.