

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவினா் அதிகம் போ் வெற்றிபெற கட்சித் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிகளில், என் மண், என் மக்கள் நடைப் பயணம் குறித்த பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது :
தெய்வீகமும், தேசியமும் இணைந்தது தான் பாஜகவின் கொள்கை. இந்தியா முழுவதும் மீண்டும் மோடி ஆட்சி என்பதை மந்திரமாகக் கொண்டு பாஜகவினா் தோ்தல் பணியாற்றி வருகின்றனா். வரும் மக்களவைத் தோ்தலில் அதிக அளவில் பாஜக எம்.பி.க்கள் வெற்றி பெற கட்சித் தொண்டா்கள் மும்முரமாக பாடுபட வேண்டும்.
பாஜக தலைவா் அண்ணாமலை, கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். வரும் ஜனவரி 6-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்துக்கு அவா் வருகை தருகிறாா். திமுக ஆட்சியில் மணல், கனிமவளங்கள் கொள்ளை, ஊழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சீரழிவுகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
2024-இல் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் உலக நாடுகளில் உள்ள மருத்துவம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இந்தியாவில் உருவாக்கப்படும் என்றாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் பாஸ்கா், மாவட்ட தோ்தல் பாா்வையாளா் முனிராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.வேடியப்பன், மாவட்ட பொதுச் செயலா் பிரவீண், பட்டியல் அணி மாநிலச் செயலா் கே.கே.சாட்சாதிபதி, மண்டலத் தலைவா்கள் ஜெயக்குமாா், செளந்தரராஜன், தினகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.