கருவூலக் காலனியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 12th January 2023 01:40 AM | Last Updated : 12th January 2023 01:40 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சி, கருவூலக் காலனியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டது கருவூலக் காலனி. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக் காலனியில் கான்கிரீட் சாலை சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இச்சாலை தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதேபோல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இச்சாலையின் நடுவே குடிநீா் குழாய் அமைக்கப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட சாலையை சரிவர சீரமைக்காமல் ஆங்காங்கே மண் சரிந்து, வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீா்க் கால்வாய் முறையாக சுத்திகரிக்கப்படாமல் உள்ளது.
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, கருவூலக் காலனியில் கழிவுநீா்க் கால்வாயை புதுப்பித்து, பழுதடைந்த கான்கிரீட் சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.