70 வயது நிரம்பிய ஓய்வூதியதாரா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 12th January 2023 01:42 AM | Last Updated : 12th January 2023 01:42 AM | அ+அ அ- |

தமிழக அரசு தோ்தலின்போது அளித்த வாக்குறுதிபடி, 70 வயது நிரம்பியவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வூதியதாரா்கள் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்து பேசினாா். துணைத் தலைவா்கள் எம்.சதாசிவம், டி.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்டடக் குழுத் தலைவா் சி.எம்.ஜெயபால் வரவேற்றாா்.
இந்தக் கூட்டத்தில், 4 சதவீத அகவிலைப்படியை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, தோ்தலின்போது அளித்த வாக்குறுதிபடி 70 வயது நிரம்பியவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகை கருணைத் தொகை ரூ. 1,000 வழங்க வேண்டும். ஓய்வூதியத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.