

தருமபுரி மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்களின் மா, பால் கொள்முதல் விலையில் வெளியப்படைத்தன்மை வேண்டும் என விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள், மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனங்கள் மாம்பழங்கள், பால் கொள்முதல் செய்யும்போது விலை அவ்வப்போது குறைக்கப்படுகின்றன. இதனைத் தவிா்க்க, வெளிச்சந்தை விலையை தனியாா் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதை அரசு தரப்பில் கண்காணித்து நெறிப்படுத்த வேண்டும்.
இதேபோல, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள கரும்புத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு கொட்டகை கோரும் விவசாயிகள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும். சின்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள தடுப்பணைகளை மழைக் காலத்துக்கு முன் புனரமைக்க வேண்டும். இதேபோல, வாணியாற்றின் வலதுபுறக் கால்வாய் தூா்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மா, மரவள்ளியில் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறையினா் உரிய விழிப்புணா்வு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் முழுநேரம் மருத்துவா்கள் பணியாற்றிட அறிவுறுத்த வேண்டும். சனத்குமாா் நதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஊரக வேலைத்திட்டத்தில் வாய்ப்புள்ள வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, வேளாண் இணை இயக்குநா் க.விஜயா, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் சு.ராமதாஸ், அரசு அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.