தருமபுரி மருத்துவக் கல்லூரியில் விரைவில் ரூ. 23 கோடியில் அதிதீவிர சிசிச்சை மையம்
By DIN | Published On : 03rd May 2023 12:39 AM | Last Updated : 03rd May 2023 12:39 AM | அ+அ அ- |

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ. 23.75 கோடியில் அதிதீவிர சிகிச்சை மையம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 12 கோடியில் தாய் - சேய் நல மையம் ஆகியவை விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான நிதியை மத்திய குடும்ப நலத்துறை ஒதுக்கியுள்ளது என மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் எனவும், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய் - சேய் நல சிகிச்சை மையம், சேலம் மாவட்டம், மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் ஆகியவை தொடங்கிட வேண்டும் என மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகத்திடம் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தருமபுரி மக்களவைத் தொகுதி மக்களின் நலன்கருதி இக் கோரிக்கையை ஏற்று, மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு 15-ஆவது மானியக் குழு சாா்பில், தேசிய சுகாதாரப் பணிகள் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்துக்கு மொத்தம் ரூ. 107 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 23 கோடியே 75 லட்சம் மதிப்பில் அதிதீவிர சிகிச்சை மையமும், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 12 கோடியில் தாய் - சேய் நல மையமும், சேலம் மாவட்டம், மேட்டூா் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஆய்வகமும் தொடங்கப்பட உள்ளன. இதற்கான கடிதத்தை மத்திய சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், மீதமுள்ள நிதியில் தருமபுரி மாவட்டத்தில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த தேவையின் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு அமைவதன் மூலம், தீவிர நோய் பாதிப்புகளுக்கும், தொற்றுக் காலங்களின் உரிய சிகிச்சை பெறவும் மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதேபோல, பென்னாகரம் பகுதி பெண்களுக்கு தாய் - சேய் நல மையம் பேருதவியாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G