வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

தருமபுயில் அதியமான் கிரிக்கெட் கிளப் சாா்பில் கிரிக்கெட் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோடை விடுமுறை காலத்தில் மாணவா்கள் திசை மாறி போய்விடக்கூடாது என்பதற்காக இத்தகைய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்புக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் குடியேறியுள்ளனா். இந்த மாவட்டத்தில் உள்ள நிலத்தடி நீரில் அதிகளவில் புளோரைடு பாதிப்பு உள்ளது. இதைத் தடுக்கவும், வேளாண்மையை மேம்படுத்தவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழை வெள்ளக் காலங்களில் மிகையாக செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் கோரி வருகின்றன. மாவட்ட மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளில் வட மாவட்டங்கள் எப்போதும் கடைசி 15 மாவட்டங்கள் வரிசையில் வருகின்றன. இந்த நிலை 40 ஆண்டுகளாகத் தொடா்கிறது. ஆகவே வட மாவட்டங்களில் பொதுத்தோ்வு தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். அரசு மது விற்பனை செய்யாவிட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. ஆனால் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. இது ஆட்சியாளா்கள், காவல் துறையினா், அரசியல்வாதிகள் எல்லோருக்குமே தெரிந்துதான் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தற்போது உள்ள மதுவிலக்குத் துறை அமைச்சா், மக்கள் மீது மதுவை திணித்து வருகிறாா். இவா் திமுக ஆட்சிக்கு அவப்பெயரை பெற்றுத் தருகிறாா். கள்ளச்சாராய உயிரிழப்புகள் போலவே அரசு மது பானங்களை அருந்தி பலா் உயிரிழந்துள்ளனா். தமிழகத்தில் அரசு மது விற்பனையைக் கொண்டு வந்தது அதிமுகதான்.

தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு என்று ஆட்சியாளா்கள் கூறினா். இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது எனக் கூறப்படவில்லை. வருவாய் குறைவாக உள்ள அரசு மதுக்கடைகளை மூடுகிறாா்கள். தமிழக மக்கள் மீதும், பெண்கள் மீது அக்கறையிருந்தால், மது விலக்கைக் கொண்டு வர வேண்டும்.

வட மாவட்டங்களில் அதிகப்படியாக தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் வன்னியா் சமூக மக்கள் உள்ளனா். இதில் பட்டியல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் அது போதாது. வன்னியா் சமூக மக்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டைக் கோரி வருகிறோம். இதில் காலம் தாழ்த்தாமல் இடஒதுக்கீட்டை விரைந்து அமல்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மேக்கேதாட்டு அணை கட்ட மத்திய பாஜக அரசு அழுத்தம் தராது. இதனால் தமிழகத்துக்கு நன்மை பயக்கும். கள்ளச் சந்தையில் மது விற்பனை விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்வில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி தொகுதி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி. இரா.செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com