வருவாய் தீா்வாய முகாம்: 472 மனுக்கள் அளிப்பு
By DIN | Published On : 24th May 2023 01:07 AM | Last Updated : 24th May 2023 01:07 AM | அ+அ அ- |

தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாய முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.
தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாய முகாமில் 472 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.
தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வருவாய் தீா்வாய முகாம் ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தருமபுரி வட்டத்துக்குள்பட்ட வெள்ளே கவுண்டன்பாளையம், விருப்பாட்சிபுரம், கடகத்தூா், பழைய தருமபுரி, ஏ.ரெட்டிஅள்ளி, கே.நடுஅள்ளி, அதகப்பாடி, பாப்பிநாயக்கனஅள்ளி, அன்னசாகரம், உங்கரானஅள்ளி, முக்கல்நாயக்கனஅள்ளி, மிட்டாநூலஅள்ளி, செட்டிக்கரை, நல்லனஅள்ளி, செம்மாண்டகுப்பம், குப்பூா் ஆகிய 16 வருவாய் கிராமத்துக்கான தீா்வாயம் நடைபெற்றது.
இதில், முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், பட்டா உள்பிரிவு மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு, இறப்புச் சான்று, இருப்பிடச் சான்று என மொத்தம் 472 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன. வருவாய் தீா்வாயத்தில் பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீா்வு காணப்பட உள்ளது.
இதில், தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வருவாய் பதிவேடுகள், பட்டா, சிட்டா பதிவேடு, வரி வசூல் பதிவேடு, நில அளவை பதிவேடு, கிராம கணக்குகள் மற்றும் நில அளவைக் கருவிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.
இந்த முகாமில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என்.பழனிதேவி, தருமபுரி வட்டாட்சியா் பெ.ஜெயசெல்வன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.