அரூா், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
By DIN | Published On : 26th May 2023 11:14 PM | Last Updated : 26th May 2023 11:14 PM | அ+அ அ- |

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் பொ.வெங்கடேசன் (அரூா்), வே.அன்பரசி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர இணைய வழியில் விண்ணப்பம் செய்துள்ள மாணவா்களுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், மாநில, மாவட்ட அளவிலான விளையாட்டு வீரா்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மே 29-ஆம் தேதி தொடங்குகிறது.
முதல்கட்ட பொதுக் கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10-ஆம் தேதி வரையிலும், இரண்டாம்கட்ட பொதுக் கலந்தாய்வு ஜூன் 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இணைய வழியில் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு அவா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக மாணவா் சோ்க்கை குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட சான்றிதழ்கள், நகல்கள், புகைப்படங்களுடன் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.