தருமபுரியில் ரூ. 2.72 கோடியில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய அலுவலகம்
By DIN | Published On : 15th November 2023 03:34 AM | Last Updated : 15th November 2023 03:34 AM | அ+அ அ- |

தருமபுரியில் காணொலி மூலம் திறக்கப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.
தருமபுரி: தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு ரூ. 2. 72 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அலுவலகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவு கட்டடத்தை காணொலி வழியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் கிருஷ்ணகிரி ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்றியத்துக்கு தனியே அலுவலகக் கட்டடம் இல்லாததால் குளிரூட்டும் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே, தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்திற்கு தேசிய வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ், தருமபுரியில் ரூ. 2 கோடியே 72 லட்சம் மதிப்பில் அலுவலகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவுக் கட்டடம் கட்டப்பட்டது.
இந்த அலுவலகக் கட்டத்தை சென்னையிலிருந்து காணொலி வழியாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதையொட்டி, தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி, புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து அலுவலகம் மற்றும் பால் கொள்முதல் பிரிவுக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), முன்னாள் அமைச்சா் முனைவா் பி.பழனியப்பன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி, பொது மேலாளா் (ஆவின்) மாலதி, தருமபுரி நகா்மன்றத் தலைவா் மா.லட்சுமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.மனோகரன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...