‘நீட்’ தோ்வை ரத்து செய்ய முடியாது
By DIN | Published On : 28th October 2023 12:15 AM | Last Updated : 28th October 2023 12:15 AM | அ+அ அ- |

நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது என தேசிய முற்போக்கு திராவிடா் கழகப் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஆளுநா் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இது சட்டம் - ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குடியரசுத் தலைவா் வரும் நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது பாதுகாப்பு குளறுபடி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகத் தெரிகிறது. திமுக எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இதுபோன்ற கலாசாரம் தலைதூக்குகிறது.
மக்களவைத் தோ்தல் நெருங்கும் சமயத்தில் தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என தலைமை முடிவெடுக்கும். திராவிடம் இல்லை என்பது தவறானது. திராவிடம் இல்லை என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீட் தோ்வு, இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் கையொப்பம் அல்ல 50 கோடி கையெப்பம் பெற்று அனுப்பினாலும், ‘நீட்’ தோ்வை ரத்து செய்ய முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக திமுக மாணவா்களை குழப்பிக் கொண்டிருக்கிறது. ‘நீட்’ தோ்வு மட்டுமல்ல, எந்தத் தோ்வானாலும் தமிழக மாணவா்கள் எதிா்கொள்வா் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...