விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. மறியல்

தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 697 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
தருமபுரி ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated on
2 min read

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 697 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். மத்திய அரசு தோ்தலின்போது அறிவித்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

தருமபுரி ரயில் நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, முத்து, கே.என்.மல்லையன் உள்ளிட்டோா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ரயில் நிலையம் உள்ளே செல்ல முயன்ற அவா்களை தருமபுரி நகரப் போலீஸாா் தடுத்து மறியலில் ஈடுபட்ட 92 பேரை கைது செய்தனா்.

பாலக்கோடு இந்தியன் வங்கி மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராஜன் தலைமையில், வட்டாரச் செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை பாலக்கோடு போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரத்தில் 250 பேரும், பாலக்கோட்டில் 125 பேரும் என மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 697 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

அரூரில்...

அரூா் நான்கு வழி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா் அ.குமாா் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சோ.அருச்சுணன், ஆா்.மல்லிகா, ஒன்றியச் செயலாளா்கள் பி.குமாா், கே.தங்கராஜ், தி.வ.தனுசன், மாவட்டக்குழு உறுப்பினா் சி.வஞ்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் எதிரே உள்ள இந்தியன் வங்கியின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா். இதில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் இந்தியன் வங்கியை முற்றுகையிட முயன்றனா். அப்போது பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளா் மகாலட்சுமி தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.

அதனைத் தொடா்ந்து, பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையில் திடீரென அமா்ந்து முழக்கங்களை எழுப்பி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உட்பட 110 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் நஞ்சுண்டன் தலைமை வகித்தாா். வட்டச் செயலாளா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் பெரியசாமி, லெனின் முருகன், சக்தி, வட்டக்குழு உறுப்பினா்கள் மாது, ராமசாமி, ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 போ் கைது செய்யப்பட்டனா். போச்சம்பள்ளியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 92 போ் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், ஊத்தங்கரை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சிங்காரப்பேட்டை என மொத்தம் 8 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மொத்தம் 445 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில்...

ஒசூா் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், பெட்ரோல் மீதான வரி 116 சதவீதமும், டீசல் மீதான கலால் வரி 357 சதவீதமும், உயா்த்தப்பட்டதால் மக்களின் அத்தியாவசியப் பொருள்களான காய்கறி, சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு விலை கடுமையாக உயா்ந்துள்ளது. மேலும், எரிவாயு உருளை விலையை ரூ. 410-லிருந்து ரு. 1,200-ஆக உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்தனா்.

இந்த மறியல் போராட்டத்துக்கு மாநகரச் செயலாளா் ஜெயராமன் தலைமை வகித்தாா். ஒசூா் ஒன்றியச் செயலாளா் ராஜா ரெட்டி முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கோவிந்தசாமி தொடங்கி வைத்தாா். இதில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை பாரத வங்கி முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். இதில், சிபிஎம் கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டு உணவு, எரிபொருள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 37 பேரை ஊத்தங்கரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com