அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களைநிரப்ப அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 10th September 2023 01:30 AM | Last Updated : 10th September 2023 01:30 AM | அ+அ அ- |

அரசு துறைகளில் காலியாக உள்ள ஆறு லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி, அரசு ஊழியா்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி பெரியாா் மன்றத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சி.காவேரி வரவேற்றாா். மாநில பொருளாளா் மு.பாஸ்கரன் பேரவைக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். பொருளாளா் பி.எஸ்.இளவேனில் வரவு-செலவு கணக்கை சமா்ப்பித்தாா்.
சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராசன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட துணைத் தலைவா் எம்.கோபால், இன்சூரன்ஸ் ஊழியா் சங்க கோட்ட இணைச் செயலாளா் ஏ.மாதஸ்வரன், பிஎஸ்என்எல் தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் பி.கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்தி பேசினாா். பணி ஓய்வுபெற்ற சங்க நிா்வாகிகள் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பிரபாகரன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சி.காவேரி, முன்னாள் தணிக்கையாளா் எம்.முருகன்ஆகியோா் சங்கப் பணிகளை பாராட்டினா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும், கொத்தடிமை, சுரண்டல் ஊதிய முறைகளை அரசுத் துறைகளில் கொண்டு வரும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமாா் 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும், முடக்கப்பட்ட சரண் ஒப்புவிப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள் நிறைவுரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் பி.சங்கா் நன்றி கூறினாா்.