தருமபுரி தொகுதி: ‘அதியமான்' பூமியில் நான்குமுனைப் போட்டி

பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செüமியா அன்புமணி போட்டியிடுவதால் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது தருமபுரி.
தருமபுரி தொகுதி: ‘அதியமான்' பூமியில் நான்குமுனைப் போட்டி
Published on
Updated on
2 min read

ஆர்.ராதாகிருஷ்ணன்

பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செüமியா அன்புமணி போட்டியிடுவதால் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது தருமபுரி. அதியமான் அரசாண்ட இந்த பூமியின் மக்கள் பிரதிநிதியாக நான்குமுனைப் போட்டியில் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்?

தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளாக, தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தின் மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியும் உள்ளன.

தற்போதைய மக்களவை உறுப்பினர்: தருமபுரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக தற்போது திமுகவைச் சேர்ந்த டிஎன்வி எஸ்.செந்தில்குமார் உள்ளார்.

கடந்த 1951-ஆம் ஆண்டுமுதல் 13 தேர்தலை இத் தொகுதி சந்தித்துள்ளது. இதில், அதிமுக இரண்டு முறையும், திமுக மூன்று முறையும், பாமக நான்கு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும், தமாகா மற்றும் சுயேச்சை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் இந்தத் தேர்தலில் "இந்தியா' கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக ஆ.மணி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக செüமியா அன்புமணி, அதிமுக சார்பில் ர.அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பொன்னிவளவன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை திமுக, பாமக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் பலமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளதால், களத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

திமுக: திமுக வேட்பாளர் ஆ.மணி, கடந்த 2019}இல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இருப்பினும், ஏற்கெனவே தேர்தலில் போட்டியிட்டவர் என்பதோடு கட்சியின் மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர்.

இவருக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் என கூட்டணிக் கட்சிகளின் பலம் உள்ளது. மாநில ஆளும் கட்சியின் வேட்பாளராக இருப்பது பல வகைகளில் இவருக்கு சாதகமான அம்சம்.

பாமக: பாமக வேட்பாளராக அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸின் மருமகளும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவியுமான செüமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர், தேர்தல் அரசியலுக்குப் புதியவர். ஆனால், பாரம்பரியமான அரசியல் குடும்பங்களைச் சார்ந்தவர்.

திருத்தணி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விநாயகம் இவரது பாட்டனார். இவரது தந்தை கிருஷ்ணசாமி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். இவரது சகோதரர் விஷ்ணு பிரசாத் தற்போது ஆரணி மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். கடலூரில் இவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்). பாமக மாநிலத் தலைவர் அன்புமணியின் மனைவி என புகுந்த வீட்டிலும் அரசியல் பின்புலம் கொண்டிருப்பவர்.

மேட்டூர், தருமபுரி, பென்னாகரம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாமக எம்எல்ஏக்கள் இருப்பது இவருக்கு சாதகமான அம்சம். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியின் பிராபல்யமும் இவருக்கு கூடுதல் பலம்.

அதிமுக: அதிமுக வேட்பாளர் ர.அசோகன், தருமபுரி அதிமுக நகரச் செயலராக உள்ள பூக்கடை பெ.ரவியின் மகன். அரசு மருத்துவராகப் பணியாற்றிய இவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பணியை ராஜிநாமா செய்துள்ளார்.

நேரடித் தேர்தலுக்கு புதியவர் என்றாலும் தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பது இவரது பலமாகும்.

ஜாதி அடிப்படையிலான வாக்குகள் தேர்தல் முடிவுகளில் தீவிர தாக்கம் செலுத்தும் தொகுதியான இங்கு, வன்னிய சமுதாயத்தினரின் வாக்குகள் முக்கியத்துவம் வகித்து வந்துள்ளன. வரும் தேர்தலில் இந்த நட்சத்திரத் தொகுதியின் பிரதிநிதியாக வாகை சூட இருப்பவர் யாரென்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தெரியும்.

நிறைவேறிய சிறப்புத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தையும் சேலம் மாவட்டத்தையும் இணைக்கும் தொப்பூர் கணவாய் சாலையில் (இது கர்நாடகத்தை தமிழகம் வழியாக கேரளத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையும் கூட) சாலை வடிவமைப்பு சரியில்லாததால் அதிக அளவில் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இங்கு சாலை விபத்துகளைத் தடுக்க மாற்றுச் சாலை அமைக்கப்பட வேண்டும் எனும் பல தசாப்தங்களாக இத் தொகுதி மக்கள் விடுத்து வந்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. அதன்படி, தொப்பூர் கணவாய் சாலையில் 6.5 கி.மீ. தொலைவுக்கு ரூ. 900கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டப் பணிக்கு மத்திய அரசு அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ளது.

கோரிக்கைகள்

  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் சொந்த மண்ணில் வேலைவாய்ப்பு பெற வேண்டும்.

  • காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் இருந்து நீரேற்றுத் திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்படுத்த வழிவகுக்க வேண்டும்.

  • தென்பெண்ணையில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு இணைப்புக் கால்வாய்த் திட்டம், தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய்த் திட்டம், வாணியாறு நீரேற்றுத் திட்டம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

  • வேளாண் தொழிற்சாலைகள், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் ஆலைகள், தக்காளி கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com