

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2.30 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றின் வெளியேற்றப்பட்டது.
தொடர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த 23 நாள்களாக தருமபுரி மாவட்ட நிர்வாகமானது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதித்து வந்தது.
தற்போது காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து, வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி உத்தரவின் பெயரில் 23 நாள்களுக்குப் பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜிகே மணி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஷகிலா ஆகியோர்கள் ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடு வரை பரிசல் பயணத்தினை தொடங்கி வைத்தனர்.
இதில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் அற்புதம் அன்பு, கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், பாஜக மாநில மீனவரணி செயலாளர் மூர்த்தி, ஒகேனக்கல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, மாவட்டத் தலைவர் செல்வகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் கெம்பு ராஜ், அதிமுக மீனவர் அணி மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.