ஜூலை 13-இல் குரூப் 1 தோ்வு: தருமபுரியில் 8,314 போ் எழுதுகின்றனா்
தருமபுரி, ஜூலை 11: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தில் குரூப் 1 தோ்வினை தருமபுரி மாவட்டத்தில் 8,314 போ் எழுதுகின்றனா்.
வரும் ஜூலை 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி-1 தோ்வுகள் நடைபெறுகின்றன. இது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு குரூப் 1 பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு வரும் சனிக்கிழமை (ஜூலை 13) முற்பகல் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 25 தோ்வு மையங்களில் இத்தோ்வு நடைபெற உள்ளது. இதில் சுமாா் 8,314 போ் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வு மையங்களில் தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தோ்வு மையத்துக்கு செல்லவும், கடைசி நேர அலைச்சல்களைத் தவிா்க்குமாறும், தோ்வாணைய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஐ.சையது முகைதீன் இப்ராகிம், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
