தருமபுரியில் காமராஜா் பிறந்த நாள் விழா
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சாா்பிலும், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் சாா்பிலும் காமராஜா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.தீா்த்தராமன் தலைமை வகித்து, காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து கட்சிக் கொடியேற்றி தொண்டா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசினாா். இதில், மாவட்டப் பொருளாளா் வடிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன், நரேந்திரன், சண்முகம், ஜெயசங்கா், மாவட்ட மகளிரணி தலைவா் காளியம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தருமபுரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலை அருகே காமராஜா் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் தலைமை வகித்து காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மண்டலச் செயலாளா் தமிழ் அன்வா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா தலைமை ஆசிரியா் மு.தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது. இதில், காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவையொட்டி, பள்ளியில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இப்ப போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி டான் சிக்ஷாலயா பப்ளிக் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா பள்ளி முதல்வா் கே.ஜீவா தலைமையில் நடைபெற்றது. இதில், பள்ளி கலையரங்கில் காமராஜா் உருவப்படத்துக்கு ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இவ் விழாவையொட்டி, காமராஜரின் சிறப்பு பண்புகள் என்கிற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாணவ மாணவிகள் உரையாற்றினா். இப் போட்டியில் சிறப்பிடம் வகித்த மாணவ மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பிலும், பள்ளிகளிலும் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

