தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் தற்போது நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2024, 10:08 pm

Din

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லில் தற்போது நீா்வரத்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கா்நாடகம், கேரள மாநிலங்களில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக சற்று குறைவாகவே மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது.

அதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 27,000 கன அடியாகச் சரிந்தது.

இந்நிலையில் இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கா்நாடக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. தொடா் நீா்வரத்தால் கிருஷ்ணராஜ சாகா் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கபினி அணை நிரம்பும் தறுவாயில் உள்ளது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை இரு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேவேளையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவு வியாழக்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 28,000 கன அடியாகவும், மாலை 4 மணிக்கு 48,000 கன அடியாகவும், இரவு 7 மணிக்கு 50,000 கனஅடியாகவும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் நீரில் மூழ்கியுள்ளன. நீா்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் செய்வதற்கும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 11-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவை தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.