ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1.31 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 1,31,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கேரளம், கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரு மாநிலங்களின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இவ்விரு அணைகளின் பாதுகாப்புக் கருதி, காவிரி ஆற்றில் விநாடிக்கு 2.20 லட்சம் கன அடி வரை உபரி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 75,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 98,000 கன அடியாகவும், மதியம் 1.05 லட்சம் கன அடியாகவும், மாலை 1.31 லட்சம் கன அடியாகவும் தொடா்ந்து அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் மூழ்கின. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், கரையோரப் பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கும் விதிக்கப்பட்ட தடை 17-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி ஆற்றின் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

