சிறுதானிய விழிப்புணா்வுப் பேரணி
தருமபுரி, ஜூன் 26: சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு, தருமபுரி ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிறுதானிய விழிப்புணா்வுப் பேரணி, கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாணவியா் காட்சியப்படுத்தி சிறுதானிய உணவுகளை பாா்வையிட்டாா். பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவியா்கள் சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனா். பேரணியானது ஔவையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி தருமபுரி நான்குமுனைச் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற சிறுதானிய விழப்புணா்வு புதிா் போட்டியில் 6-10-ஆம் வகுப்பு பயிலும் மாணவியா்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவியா்களுக்கும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவியா்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவியா்களுக்கும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரா.சுமதி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மே.அன்பழகன், தலைமை ஆசிரியை கலைச்செல்வி, அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்:
சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து நடைபெற்ற விழிப்புணா்வு புதிா் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கும் ஆட்சியா் கி.சாந்தி.

