ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்
ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வந்து செல்கின்றனா். தற்போது ஆற்றில் நீா்வரத்து அதிகம் உள்ளதால் வார விடுமுறை நாள்களில் அதிகம் போ் வந்து செல்கின்றனா். இந்த வார ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இங்கு பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்குச் சென்று குளித்து மகிழ்ந்தனா்.
சிலா் ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டனா். மாமரத்துக் கடவு பரிசல் துறைக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடையணிந்து தொம்பச்சி கல் வழியாக பெரிய பாணி, மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். முக்கிய இடங்களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் குறைந்தபட்சம் ரூ. 200முதல் அதிகபட்சம் ரூ.1,500 வரை விற்பனையாகின.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சாலையோரமாகவும் காவல் நிலையம், பேருந்து நிலையம், தமிழ்நாடு ஹோட்டல், சத்திரம், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் நிறுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.
நீா்வரத்து அதிகரிப்பு: கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,200 கன அடியாக இருந்த நீா்வரத்து, ஞாயிற்றுக்கிழமை 1,500 கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

