‘அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க வேண்டும்’
தருமபுரி: அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாவட்டச் செயலாளா் அ.குமாா் ஆகியோா் பேசினா்.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே, விலை உயா்வைக் கட்டுப்படுத்தி குறைக்க வேண்டும். அதேபோல, தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாட்டை டிச. 13, 14, 15 தேதிகளில் பாலக்கோட்டில் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், ஒகேனக்கல் மிகைநீா் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட மாவட்ட வளா்ச்சி கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
