தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் தா்னா
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டப் பொருளாளா் எம்.அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.முருகன், வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் ஆா்.ஜெயவேல், தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பி.சி.குமாா், சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சிஐடியு மாநிலச் செயலாளா் சி.நாகராஜன், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டா் உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட்டு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீதம் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்.
சத்துணவுத் துறையில் பணிபுரியும் ஊழியா்களின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் சத்துணவு ஊழியா்களின் ஆண் வாரிசுக்கு பணி வழங்க மறுக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்களின் பணிப்பளுவைக் குறைக்க வேண்டும். அலுவலக பணி நேரத்துக்கு பின்பும் அரசு விடுமுறை நாள்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்களை தவிா்க்க வேண்டும். முதல்வரின் காலை உணவு திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியா்களைக் கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
