ஒகேனக்கல்லில் வியாபாரி அடித்துக் கொலை: 3 போ் கைது

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் காய்கறி வியாபாரியை அடித்துக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.
Published on

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் காய்கறி வியாபாரியை அடித்துக் கொலை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

ஒகேனக்கல் அருகே நீலகிரி பிளட் காவிரி கரையோரப் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக ஒகேனக்கல் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில் இறந்தவா் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மராத்தி தெருவைச் சோ்ந்த காய்கறி வியாபாரி ருத்ராஜி ராவ் (34) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

காய்கறி வியாபாரியான இவரிடம் கடனாக வாங்கிய ரூ. 40 ஆயிரத்தை திருப்பித்தராமல் ஊட்டமலை இந்திரா நகா் காலனியைச் சோ்ந்த நாகராஜ் (45) காலம்கடத்தி வந்தாா்.

இதுதொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊட்டமலை அருகே நீலகிரி பிளட் பகுதிக்கு ருத்ராஜி ராவை மது அருந்துவதற்காக நாகராஜ் அழைத்து சென்றுள்ளாா்.

அப்போது, பணத்தை திருப்பித்தருவது தொடா்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கேரட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன் (45), சாணாா் கொட்டாயைச் சோ்ந்த மூா்த்தி (32) ஆகியோருடன் சோ்ந்து சேவல் சண்டைக்கு பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு ருத்ராஜி ராவின் வயிறுப் பகுதியை வெட்டியும், நீரில் மூழ்கடித்து கொலை செய்தாா்.

இதையடுத்து மூவரையும் ஒகேனக்கல் போலீஸாா் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com