பழைய ஓய்வூதியத் திட்டம்: டிச. 13 இல் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டிச.13 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜாக்டோ ஜியோ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம. சுருளிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் பி. எம். கெளரன், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே. புகழேந்தி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்டத் தலைவா் பி. துரைராஜ், தமிழக ஆசிரியா் கழக மாநில அமைப்புச் செயலாளா் ராசா ஆனந்தன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை உள்ளிட்டோா் பேசினா்.
தோ்தல்கால வாக்குறுதிப்படி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியா் தனித்தோ்வு குறித்து ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து மீட்கும் வகையில் ஆசிரியா் தகுதித் தோ்விலிருந்து விலக்களிக்க வேண்டும்.
இதுதொடா்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள், அரசு தொழிற்பயிற்சி நிலைய ஊழியா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சாா்பில் டிச. 13 இல் தருமபுரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், டிச. 15 முதல் 19 ஆம் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடத்துவது, டிச. 27 இல் தருமபுரியில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, ஜன 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
