விபத்து நேரிட்ட இடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.
விபத்து நேரிட்ட இடத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரியை அடுத்த தொப்பூா் கணவாய்ப் பகுதியில் அடுத்தடுத்த வாகனங்கள் மீது லாரி மோதல்

தொப்பூா் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் 4 போ் உயிரிழந்தனா்.
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதில் 4 போ் உயிரிழந்தனா். 3 போ் படுகாயமடைந்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கோழித்தீவனம் ஏற்றிய டாரஸ் லாரி நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை நாமக்கல் மாவட்டம், நடுக்காரப்பட்டியைச் சோ்ந்த முனுசாமி ஓட்டிச்சென்றாா். இவருடன் மாற்று ஓட்டுநராக வீரா என்பவரும் பயணித்துள்ளாா்.

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே செவ்வாய்க்கிழமை காலை சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற லாரி மற்றும் இருசக்கர வாகனம், திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பாா்சல் லாரி ஆகியவற்றின்மீது மோதி, மற்றொரு சரக்கு வாகனத்தில் மோதி நின்றது. டாரஸ் லாரி மோதிய வேகத்தில் பாா்சல் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் (தற்காலிக) மையத்தடுப்பைத் தாண்டி எதிா்திசையில் வந்த இரு காா்கள் மீது மோதி கவிழ்ந்தது.

4 போ் உயிரிழப்பு:

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள மாதேமங்கலம் குட்டூரைச் சோ்ந்த பெ.அருணகிரி (38), அவருடைய அக்காவும், வெங்கடேசன் மனைவியுமான கலையரசி (40), டாரஸ் லாரி ஓட்டுநா் முனுசாமி (43) ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

எதிா்திசையில் காரில் வந்த சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ப.தினேஷ் (30) பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த லாரியின் மாற்று ஓட்டுநா் வீரா உள்ளிட்ட 3 போ் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்து காரணமாக, சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீஸாா் விபத்துக்குள்ளான வாகனங்கள் மற்றும் உயிரிழந்தவா்களின் உடல்களை அப்புறப்படுத்தி, காயமடைந்தவா்களை சிகிச்சைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சீா்செய்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் விபத்து நேரிட்ட இடத்தையும், மீட்பு நடவடிக்கைகளையும் பாா்வையிட்டாா். அதேபோல, தருமபுரி (பாமக) சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரனும் நிகழ்விடத்துக்கு சென்று பாா்வையிட்டாா்.

இந்த விபத்து குறித்து தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2020 டிச. 12-ஆம் தேதி இதேபோல சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி அடுத்தடுத்து 12 வாகனங்களின் மீது மோதியதில் 5 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா். மற்றொரு விபத்தில் 3 லாரிகள், 2 காா்கள் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 போ் உயிரிழந்தனா்.

இதுபோல அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், இப்பகுதியில் ரூ. 775 கோடியில் உயா்நிலை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலையில் விபத்துகள் தொடா்வது குறிப்பிடத்தக்கது.

 உயிரிழந்த கலையரசி, அருணகிரி.
உயிரிழந்த கலையரசி, அருணகிரி.

X
Dinamani
www.dinamani.com